தேனி:தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்குச் செல்லும் வழியில் உள்ள கம்பம் மெட்டு சாலையில், கன்னிமார் ஓடை எனும் பகுதியில், இன்று (வியாழக்கிழமை) காலை முதல் கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்துள்ளது.
மேலும், நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காரில் மூன்று பேர் மயக்கமடைந்த நிலையில் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, காருக்குள் ஒரு பெண் உட்பட மூன்று பேர் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காரில் மேற்கொண்ட சோதனையில், மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூவரும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது தெரிய வந்துள்ளது.