தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: அடுத்தடுத்து சிக்கும் அரசியல் புள்ளிகள்.. ஆற்காடு சுரேஷின் தோழிக்கு வலைவீச்சு! - armstrong murder case

Armstrong murder case: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வடசென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின் தோழியான பெண் ரவுடி புளியந்தோப்பு அஞ்சலையை பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங், புளியந்தோப்பு அஞ்சலை
ஆம்ஸ்ட்ராங், புளியந்தோப்பு அஞ்சலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 8:04 AM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவரை, ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது காவல்துறையினரை துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறிக் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

இதையடுத்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 10 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொலையில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராக கருதப்படும் மூன்று பேரை மீண்டும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார்? கூலிப்படையினருக்கு எவ்வளவு பணம் கைமாறியது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு சமீபத்தில் ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும், பெண் வழக்கறிஞர் மலர் கொடியின் வங்கி கணக்கில் மிகப்பெரிய அளவில் ரூ.50 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மலர்கொடியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினரான அருளின் செல்போன் அழைப்புகளை வைத்து தற்போது பெண் வழக்கறிஞர் மலர்கொடியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருளும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பழிக்குப் பழி என்னும் நோக்கில் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்த நிலையிலும், கொலையின் பின்னணியில் இருந்து பொருளாதார உதவி செய்தது யார்? இந்த கொலைக்கான திட்டத்தை தீட்டி கொடுத்தது யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கொலையில் மிகப்பெரிய பொருளாதார பின்னணி கொண்ட நபர் யாரோ ஒருவர் உதவி செய்திருக்கிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருளுக்கு உதவியதாக புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் திருவள்ளுர் திமுக நிர்வாகியின் மகன் சதிஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களாக கருதப்படும் பொன்னை பாலு, அருள், திருமலை ஆகிய மூவரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அப்போது இந்த பணப் பரிவர்த்தனை குறித்து அவர்களிடம் விசாரணை செய்ய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வடசென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின் தோழியான பெண் ரவுடி புளியந்தோப்பு அஞ்சலையை பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் சேர்த்து போலீசில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த படுகொலை தொடர்பாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் பரிமாற்றம்? - பெண் வழக்கறிஞரிடம் விசாரணை! - armstrong murder case

ABOUT THE AUTHOR

...view details