சென்னை:சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அருண் (26) என்பவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். அதற்காக கடந்த சில நாட்களாக அருண் ஆன்லைனில் வேலை தேடி வந்ததுள்ளார். அப்போது, கடந்த மார்ச் 31ஆம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் அமேசான், மீசோ உள்ளிட்ட ஆன்லைன் வேலை வாய்ப்பு குறித்து பதிவிட்டிருந்ததால், வேலை தேடும் ஆர்வத்தில் இருந்த அருணும் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.
அப்போது அந்த லிங்கில் தங்களுக்கு வேலை வேண்டும் என்றால், தாங்கள் சொல்லும் டாஸ்க்கை நிறைவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை நம்பிய அருண், டாஸ்க்கை செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது ஒவ்வொரு டாஸ்க்கும் ஒரு தொகையைச் செலுத்த வேண்டும் எனவும், அப்போது தான் டாஸ்க்கின் இறுதி கட்டத்திற்குச் செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டிருந்ததால், அருண் அந்த லிங்கில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.5 லட்சம் வரை செலுத்தியுள்ளார்.
பின்னர் அதில் குறிப்பிட்டது போல் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த மர்ம நபர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண், இதுகுறித்து கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்களது இருப்பிடத்தைக் கண்டுபிடித்த தனிப்படை போலீசார், அங்கு சென்று பெண் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர். பின்னர், காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.