திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் பெருமாள்மலைப் பகுதியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள கொடைக்கானலுக்கு, தனது பைக்கில் சென்று பணியை முடித்துவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மலைச் சாலையில், செண்பகனூர் பிரிவு அருகே மூன்று இளைஞர்கள் அவசரமாகப் போக வேண்டும் என்று லிப்ட் கேட்டு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள நுழைவாயில் சோதனைச் சாவடியில் இறங்கி விடுகிறோம் என்று கூறி உள்ளனர். இந்நிலையில், ஒரே பைக்கில் மொத்தம் நான்கு பேர் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது நுழைவாயில் சோதனைச் சாவடிக்கு முன்பே, மூன்று இளைஞர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியைக் கொண்டு முனியாண்டியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். உடனே சுதாரித்த முனியாண்டி, இருசக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு சாலையில் சென்ற வாகனத்தில் உதவி கேட்டுள்ளார்.
அங்கு வந்த வாகன ஓட்டிகள் இறங்கி உதவிய போது, வாகன ஓட்டிகளைப் பார்த்து மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதில், முனியாண்டிக்கு தலையில் வெட்டுக்காயம் பலமாக ஏற்பட்டதால், அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.