தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் வசித்து வருபவர் செல்வம். அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் இவர் மீது கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வம் என்பவர் கடைக்குள் புகுந்து வெட்ட முயன்றுள்ளார். ஆனால், அப்போது செல்வம் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் ஆயுதங்களுடன் தாக்க வந்த நபர்களை கைது செய்யக் கோரி கெங்குவார்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த தேவதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், செல்வத்தின் கடையின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஆயுதங்களுடன் வந்தவர்களை தேடிவந்தனர். இந்நிலையில், செல்வத்தை தாக்க வந்த 9 நபர்களில் மூவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் காமக்காபட்டியைச் சேர்ந்த சந்துரு, புவனேஸ்வரன், ரோகித் என்பது தெரியவந்தது.
மேலும், கடந்த ஆண்டு கெங்குவார்பட்டி பகுதியில் ஜெகதீஸ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய செல்வம் மற்றும் அவரது மகன் ரிசாத்ராஜ் ஆகிய இருவரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வத்தை தாக்க வந்தவர்கள் இறந்த ஜெகதீஸ்வரனின் உறவினர்கள் என்றும், அவர்களுள் யாரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:வத்தலக்குண்டில் திடீரென தீ பிடித்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கார் ஓட்டுநர்!