தூத்துக்குடி:தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே 5 மாத கர்ப்பிணியான கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது நான்கு வயது மகன் தாய் குறித்து பேசும் ஆடியோ காட்சி இணையத்தில் வெளியாகி துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(35) - ஷெர்லின் கோல்டா(35) தம்பதி. இவர்கள் 2019 ஆம் ஆண்டு காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 4 வயதில் மகன் ஒருவர் உள்ளார். தம்பதி இருவரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் பேராசிரியை கோல்டா ஐந்து மாத கர்ப்ப்பிணியாக இருந்தார். இதனால், கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 22ஆம் தேதி இரவு தம்பதிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரவீன்குமார் குளியலறை சென்ற நேரத்தில் ஷெர்லின் கோல்டா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த குடும்பத்தினர்கள் கோல்டாவை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.