தூத்துக்குடி:புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த கைலாசம் மகன் சுப்பிரமணியன் (44) என்பவரைப் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இன்று (ஏப்ரல் 10) குற்றவாளியான சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.