தூத்துக்குடி:தென்னகத்தின் நுழைவு வாயிலாக இருக்கும் தூத்துக்குடி திருமந்திர நகர், முத்துநகர் என அழைக்கப்படுகிறது. காரணம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்கி வருகிறது.
மாவட்டத்தின் சிறப்புகளை அடுக்கத் தொடங்கினால், திருச்செந்தூர் கந்தசஷ்டி,குலசை முத்தாரம்மன் கோயில் தசரா,பனிமய மாதா ஆலய திருவிழாவில் தொடங்கி கட்டபொம்மன் கோட்டை, பாரதியாரின் வீடு, உமறுப்புலவர், கால்டுவெல் என அந்தப் பட்டியல் தூத்துக்குடி எண்ணெய் புரோட்டா,மக்ரூனில் வந்து முடிகிறது. இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி தங்களது உடல், உயிர், உடமை என அனைத்தையும் இழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்களே.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமியில் தொடங்கி, கோணங்கி,பூமணி, தேவதச்சன், சோ.தர்மன் என பெரும் பட்டாளமே இன்றைக்கும் கோவில்பட்டியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இலக்கியத்தில் முக்கியமான ஆளுமைகளைத் தந்த மாவட்டம் என்ற பெருமையை தூத்துக்குடி ஏந்தி நிற்கிறது. இயற்கை தந்த பரிசாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த உகந்த இடமாக குலசை தேர்வு செய்யப்பட்டு தற்போது அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைகிறது. அந்த வகையில், வரலாற்றுக்கும், வளர்ச்சிக்கும் பஞ்சமில்லாமல் புகழை ஏந்தி இருக்கிறது தூத்துக்குடி.
தொகுதி நிலவரம்:திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 1986ம் ஆண்டு பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைக்கப்பட்டு புதிய தொகுதியாக தூத்துக்குடி உருவான நிலையில் இது வரை 3 முறை மக்களவை தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் 36வது தொகுதியாக உள்ள இந்த தொகுதியில் தூத்துக்குடி,கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், 14 லட்சத்து 48 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 7 லட்சத்து 8 ஆயிரத்து 234 பேர் ஆண்கள், 7 லட்சத்து 39 ஆயிரத்து 710 பேர் பெண்கள், 215 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இது வரை 3 மக்களைவை தேர்தலை கண்ட தூத்துக்குடி தொகுதியில், திமுக 2 முறையும், அதிமுக ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது. 15வது மக்களவை தேர்தலில் திமுகவின் எஸ் ஆர் ஜெயதுரையும், 16வது மக்களவை தேர்தலில் அதிமுகவின் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியும், 17வது மக்களவை தேர்தலில் திமுகவின் கனிமொழி கருணாநிதியும் தொகுதியை கைப்பற்றினார்.
கருணாநிதியின் மகள் டூ எம்.பி:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள், முதலமைச்சர் ஸ்டாலினின் தங்கை என்பதை தாண்டி எழுத்தாளர், கவிஞர், திராவிட இயக்கத்தின் தீவிர ஆதரவாளர், பெண் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர் என பன்முகத்தன்மை கொண்டவர்தான் கனிமொழி. எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கனிமொழி தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இந்து நாளேட்டிலும், சிங்கப்பூரில் இயங்கி வந்த தமிழ் முரசு இதழில் பணியாற்றினார். இவரது கவிதைகள், இவரை நவீன கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது.
இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் கருணாநிதிக்கு எப்போதுமே இருந்திருக்கிறது. பலரும் வலியுறுத்தியதன் அடிப்படையில், 2007ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் கனிமொழி. அப்போது, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி ஆற்றிய இவரது உரை அனைவரையும் அசர வைத்தது. கபில் சிபல், மன்மோகன் சிங் போன்ற ஆளுமைகள் இவரது உரையை பாராட்டியுள்ளனர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கனிமொழி மீது குற்றச்சாட்டப்பட்டு திகார் சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என வழக்கிலிருந்து அனைவரையும் விடுவித்தனர். கனிமொழி முதல்முறையாக மக்களவை தேர்தலைச் சந்தித்தது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தான். அந்த தேர்தலில், அவரை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கியது அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 5 லட்சத்து 63 ஆயிரத்து 143 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகளை பெற்றார். கனிமொழியைப் பொறுத்தவரை துவக்கத்திலிருந்து அவருடைய நாடாளுமன்ற உரைகள் அதிகம் கவனிக்கப்படுகின்றது. இந்தி மொழியை திணிக்காதீர்கள் என இவரது எதிர்ப்பு குரல் பலரையும் ரசிக்க வைத்தது. சமீபத்தில், 'ஆத்ம நிர்பார் பாரத் அபியானி' என்ற திட்டத்தை உச்சரிக்க சிரமப்பட்ட கனிமொழி, நான் தமிழில் பேசுகிறேன். உங்களுக்கு புரியுதா? என்று சொல்லுங்கள் என சிரித்து கொண்டே சொன்னது யாராலும் மறந்து விட முடியாது.
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு வலுவான பெண் அரசியல் தலைவர்கள் பட்டியலில் கனிமொழியை மக்கள் பார்க்கின்றனர். பெண்ணியக் கருத்துக்கள், ஆண் பெண் சமத்துவம் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடைகள், கவிதைகள் மூலம் பேசி வருகிறார் கனிமொழி. ஆனாலும், அவரால் தொகுதிக்கு எதிர்பார்த்த வளர்ச்சியைக் கொண்டுவர முடியவில்லை. பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன என குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கின்றனர் தொகுதி மக்கள்.
பார்லிமென்ட் பெர்ஃபாமன்ஸ்: நாடாளுமன்ற பங்கெடுப்பில் 69 சதவீத வருகைப்பதிவை உறுதி செய்த கனிமொழி, தீப்பெட்டி தொழிலுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்கக் கோருதல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என 65 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 182 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர், கொண்டு வந்த இரண்டு தனிநபர் மசோதாகள் நிலுவையில் உள்ளன.
வாக்குறுதிகள்: மாணவர்களின் கல்விக்கடன், விவசாயிகளின் அனைத்து வகை கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாய பொருட்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கப்படும். மீனவர் நலனுக்காக தனி கேபினட் அமைச்சரவை உருவாக்கப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், மீன்பிடித்துறைமுகங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் வங்கி அமைக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தரமான சாலைகள், குடிநீர் வசதிகள் செய்து தரப்படும். படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படும் என பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
செய்யத்தவறியவை:வைப்பாறு ஆற்றுப்படுகையில் தினமும் திருட்டுத்தனமாக மணல் கொள்ளை போகிறது. மாட்டுவண்டி வைத்து மணல் எடுக்கும் சுமார் 300 தொழிலாளர்கள், மணல் எடுக்க தங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என ஆறு ஆண்டுளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனை எம்.பி கண்டுகொள்ளவில்லை. புதியம்புத்தூர்தான் ரெடிமேட் ஆடை தொழிலை நம்பி மட்டுமே 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளனர்.
இதனால், 'ரெடிமேட் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும்' என்பது இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. அதற்காகவும் எம்.பி முயற்சிக்கவில்லை. ஶ்ரீவைகுண்டத்தில் வாழைத்தார் பதப்படுத்தும் நிலையம் இதுவரை அமைப்படவில்லை. இப்பகுதியில், மழைக்காலங்களில் அதிகப்படியாக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து வைக்க பெரிய தடுப்பணைகளும் ஏதும் இல்லை என தொகுதி மக்கள் கொந்தளித்தனர்.
5 வருடங்களில் வளர்ச்சிப் பணிகள் செய்யவில்லை:முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கூறுகையில், “தூத்துக்குடி தொகுதியில் சொல்லிக் கொள்ளும் படி எம் பி கனிமொழி எந்த வளர்ச்சி திட்டங்களும் செய்யவில்லை. தூத்துக்குடி விமான நிலையம் அதிமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மத்திய நிதியமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் பெரும் முயற்சியால் கொண்டு வரப்பட்டு அதன்பின், விமான நிலைய விரிவாக்கத்திற்கு அதிக நிலங்கள் தேவைப்பட்டதால் அப்போது நான் அமைச்சராக இருந்த நேரத்தில் 31.12.2019 அன்று 601 ஏக்கர் விரிவாக்கத்திற்கு முதலாவதாக கொடுத்தோம்.