தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை சார்பில், தேவேந்திரகுல வேளாளர் அரசியல் எழுச்சி மாநாடு பேரவைத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் விவிடி சிக்னல் அருகே நேற்று (பிப்.18) நடைபெற்றது.
இதில் திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது மேடையில் எம்.பி கனிமொழி பேசுகையில், "பாஜக நம்மை உணர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளக்கூடிய இயக்கம் இல்லை. நம்முடைய பிளவுகள் இருந்தால் கூட அதை அதிகப்படுத்தி இங்கே இருக்கக் கூடிய அமைதியைக் குறைக்கக் கூடிய வகையிலே சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மைப் பிரித்து வன்முறைகளை உருவாக்கி அந்த வன்முறை அரசியலிலே அவர்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி ஒருவர் நாங்கள் ரிஷிகளின் வழியே வந்தவர்கள் என்று கூறுகிறார். அதற்குப் பதிலாக நாங்கள் எல்லாம் சாதாரண சூத்திர மக்கள். என்று நான் கூறினேன். இப்படி ஒரு மனநிலையை வைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சி பாஜக.