தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு?... மீனவர்கள் அதிர்ச்சித் தகவல்; என்ன காரணம்? - thoothukudi fishermen

Thoothukudi Fishermen: தூத்துக்குடி கடலில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கலப்பதால் மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்புள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்போம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

thermal power station issue
கடலில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கலப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 3:27 PM IST

Updated : Feb 13, 2024, 3:55 PM IST

தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு?... மீனவர்கள் அதிர்ச்சித் தகவல்; என்ன காரணம்?

தூத்துக்குடி: இனிகோ நகர் கடற்கரைப் பகுதி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகப் பகுதிக்குத் தெற்கே உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பைபர் படகு மூலம் (நாட்டுப் படகு) மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

மேலும், இந்த கடற்கரைப் பகுதிக்குத் தெற்கில் தமிழக அரசுக்குச் சொந்தமான அனல்மின் நிலையம் (TTPS), NTPL மற்றும் SEPC அனல் மின் நிலையம் என 3 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில், தூத்துக்குடி அனல்மின் நிலையம் TTPS ஏறக்குறைய 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையம் இயங்க கடல் நீர் மிகவும் அவசியம், அதாவது அனல்மின் நிலையங்கள் இயங்கும் போது கடல் நீரை உள் வாங்கி எடுத்து மீண்டும் கடலுக்கே அனுப்புகிறது.

அப்படிக் கடல்நீரை மீண்டும் அனுப்பும் போது மறுசுழற்சி செய்யாமல் நிலக்கரி சாம்பலை ராட்சச குழாய்கள் வழியாகக் கடலில் அதிகமாக அனுப்புவதாக ஒரு பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறாக வெளியேற்றப்படும் சாம்பல் கழிவுகளால் கடல் நீர் மாசு அடைந்துள்ளது. அதேபோல கடலின் நீர்ப்பரப்பு திட்டு, திட்டாகக் காணப்பட்டு மீனவர்கள் கடலுக்குப் படகு வழியாகச் செல்ல முடியாத நிலை உருவாகி வருகின்றது.

இதேபோல், தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திற்குச் சொந்தமான அனல்மின் நிலையத்திலிருந்தும் கழிவு நீர்கள் அனைத்தும் ராட்சச குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு கடலில் விடப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது, அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவு மற்றும் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு என அனைத்தும் கடலில் போய் கலப்பதால், கடல் நீர் முற்றிலுமாக மாசடைந்து, மீன்கள் மற்றும் அதிக அளவில் கிடைக்கக்கூடிய நண்டு வகைகளின் இனப்பெருக்கம் அழிந்து வருகின்றது.

மேலும், கடந்த காலங்களில் 15 முதல் 20 அடி ஆழம் கொண்ட கடற்பகுதி தற்போது இரண்டு, மூன்று அடி ஆழம் கொண்ட பகுதியாக மாறி விட்டது. இப்படியே சென்றால் ஓரிரு வருடங்களில் மீன்பிடித் தொழில் செய்யும் பகுதியே இல்லாமல் போய் விடும். எனவே, இந்த விசயத்தில் அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதோடு மட்டுமில்லாமல் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலையும் முற்றிலுமாக புறக்கணிப்பதாக எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆல்பன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளிக்கையில், "தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகப் பகுதிக்குத் தெற்கு இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் மீனவர்கள் தொழில் செய்து வருகிறோம். இப்பகுதியில் அதிகமாக நண்டு, இறால் உற்பத்தியாகும். ஆனால் இதனை அழிக்கும் விதமாக ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

தூத்துக்குடி TTPS தெர்மல் பவர் லிமிடெட் எதிர்த்து போராட்டம் நடத்த இருக்கின்றோம். இந்த கம்பெனியில் இருந்து கழிவுகளைக் கடலில் கலக்கின்றனர். இதனால் வாழ்வாதாரம் முற்றிலும் அழியக் கூடிய சூழல் தான் நிலவியுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர், மேயர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கு மேல் இப்பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்படவில்லை என்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம். அப்போதும் செவி சாய்க்கவில்லை என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதில் உறுதியாக உள்ளோம்" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து அனல்மின் நிலைய பொறியாளர் ஒருவரிடம் கேட்ட போது, "அனல்மின் நிலைய கழிவுகளை மொத்தமாகக் கடல் அருகே உள்ள பள்ளத்தாக்கில் தேக்கி வைப்போம். அப்போது திடீரென அது நிரம்பி கடலுக்குச் சென்று விடும். ஐந்து, ஆறு நாட்களாகக் கழிவுகள் கடலில் தான் கலக்கும். அதன் பின் அதனை அப்புறப்படுத்துவோம். ஆனால் திரும்பவும் நிரம்பி கடலில் தான் கலக்கும். இது இவ்வாறு போய்க் கொண்டிருந்தால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகம் வரை வரக் கூடும்" என்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இதற்கிடையில், இந்த மீனவர்களுக்குச் சங்கம் என்ற ஒன்று உள்ளது. இந்த தூத்துக்குடி தென் பாகம் நாட்டுப் படகு மீனவர் சங்கத்தின் தலைவராகச் செயல்படுபவர் செல்வராஜ். இவர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவராகவும், இவரது மனைவி ஜெனிட்டா தூத்துக்குடி மாநகராட்சியின் துணை மேயராகவும் உள்ளார். ஆனால் பல்வேறு பதவியிலிருந்தும், திமுக ஆட்சியிலிருந்தும், தூத்துக்குடி எம்பியாக கனிமொழி இருந்தும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதது தான் மீனவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

அதுமட்டுமின்றி வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாகக் கருதப்படும் நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி எம்பி திரும்பவும் நிற்க இருப்பதாகப் பல்வேறு கருத்துகள் உலா வருகிறது. இந்த நிலையில் இப்போது தேர்தலைப் புறக்கணிப்பதாக மீனவர்கள் கூறுவது, மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் சென்னை வருகை!

Last Updated : Feb 13, 2024, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details