தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டி, முத்துசாமிபுரத்தில் ரெங்கசாமி என்பவருக்குச் சொந்தமாக 45 சென்ட் இடம் உள்ளது. அவர் கடந்த 1993ஆம் ஆண்டு இறந்து விட்ட நிலையில், அவருக்கு வாரிசு இல்லாததால், அவரது இடத்தை அவரின் உறவினரான சீனிசெல்வராஜ் (வயது 64) என்பவர் அபகரிக்க முயன்றுள்ளார்.
இதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஏற்கனவே நிலுவையில் உள்ள ஒரு வழக்கின் எண்ணை பயன்படுத்தி, அதில் தன்னுடைய பெயரை கூட்டுப்பட்டாவில் சேர்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது போன்று ஒரு போலியான ஆவணத்தை தயாரித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த உத்தரவை காண்பித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் கூட்டுப்பட்டா பெற்று அந்த இடத்தை தனது மகன் லட்சுமண குமார் (29) பெயருக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் சீனி செல்வராஜின் உறவினர் ஒருவர், இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு விசாரணையில், இதுபோன்ற ஒரு தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கவில்லை என்பதும், அதில் குறிப்பிடப்பட்ட வழக்கு எண் நிலுவையில் உள்ள வேறொரு வழக்கின் எண் என்பதும் நீதிபதிகளுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சீனி செல்வராஜ் மற்றும் அவரது மகன் லட்சுமண குமார் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவு போன்று போலியான ஆவணத்தை தயாரித்தது தெரியவந்தது.
இது குறித்து வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திருவரங்கசெல்வி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த தட்டப்பாறை போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில், சீனிசெல்வராஜ் மற்றும் அவரது மகன் லட்சுமண குமார் ஆகியோருக்கு 4 பிரிவுகளின் கீழ் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து சீனிசெல்வராஜ், லட்சுமண குமார் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி உதயவேலன், ஏற்கனவே மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"உயிருடன் இருப்பவரை எப்படி இறந்ததாக அறிக்கை அளிக்கலாம்?” - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! - Trichy Refugee Camp