தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தூத்துக்குடியில் பெய்த கனமழையால் 225 வீடுகள் சேதம்" - ஆட்சியர் இளம் பகவத் தகவல்! - THOOTHUKUDI RAIN

பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 9:20 PM IST

Updated : Dec 16, 2024, 10:33 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பக்கீல் ஓடை வழியாக தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. கடல் நீர் மட்டத்தைத் தொடர்ந்து தண்ணீர் 6 மணி நேரத்திற்கு ஒரு தடவை வேகமாக செல்கிறது. சில நேரங்களில் மெதுவாக செல்கிறது. 17, 18 வார்டு பகுதிகள் கடல் மட்டத்தை விட தாழ்வாக இருப்பதால் அங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. அதை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு தினங்களில் பெய்த மழையில் 8 சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அனைத்து சாலைகளும் சரி செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று ஏரல் பாலம் சேதமானதால், அந்த பகுதியில் மட்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏரல் தரைப் பாலத்தை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அது விரைவில் சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திலுள்ள மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆகியவற்றிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது கோரம்பள்ளம் குளத்தின் மதகுகள் மூடப்பட்டு விவசாய தேவைக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 225 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு மாடு, 41 ஆடுகள் பலியாகியுள்ளன. மேலும், கோழிப்பண்ணையில் பத்தாயிரம் கோழிகள் இறந்துள்ளன" என்றார்.

மாவட்ட ஆட்சியர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:அடுத்த மூன்று நாட்களுக்கு அடைமழைதான்! வானிலை ஆய்வு மையம் கூறும் தகவல் என்ன?

தொடர்ந்து பேசிய அவர், "குளங்களில் உடைப்பு ஏற்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குளங்களில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. 80க்கும் மேற்பட்ட குளங்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. மேலும் மருதூர் அணைக்கட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள பாசன குளங்கள் அனைத்தும் 90 சதவீதம் நிரம்பியுள்ளன.

கால்வாய் பாசனம் இல்லாத 180 குளங்கள் 60 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை டிசம்பர் மாதம் சராசரியாக 150 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது குறைவாகவே உள்ளது. இன்னும் 120 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பயிர்கள் சேதம் குறித்து தற்போது கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு, மூன்று நாட்களில் இந்த கணக்கெடுப்பு முழுவதுமாக நிறைவு பெறும். எந்த ஒரு விவசாயியும் இதில் விடுபடக்கூடாது என்ற வகையில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதன் பின்பு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

Last Updated : Dec 16, 2024, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details