தூத்துக்குடி: தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றன. இதை நம்பி சுமார் 17,000 தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி முதல் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், தங்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும், கேரள விசைப்படகு மீனவர்கள் தூத்துக்குடி கடல் எல்லைக்குள் இரவு, பகல் என அத்துமீறி நுழைந்து மீன் பிடித்து வருவதை நிறுத்த வேண்டும், 11 விசைப்படகு மற்றும் மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை கடந்த 27ஆம் தேதி அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் விசைப்படகு உரிமையாளர்கள் ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து இன்று 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக மீன்பிடி தொழிலை நம்பி உள்ள சுமார் 17,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் எட்டு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.