சென்னை :குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி பகுதியில் எலி மருந்தின் காரணமாக இரு குழந்தைகள் மரணமடைந்த குடியிருப்பு பகுதிக்கு ஈடிவி பாரத் நிருபர் சென்ற போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அசாதாரணமான ஒரு அமைதி நிலவியது. வார இறுதி நாளான அன்று கூட குழந்தைகளை வீட்டினுள்ளேயே வைத்திருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர்.
நவம்பர் 13ம் தேதியன்று எலிமருந்தின் தாக்கத்தால் இரு குழந்தைகள் மரணித்ததை சுட்டிக்காட்டும் அவர்கள் அன்றைய தினம், வீட்டிற்கு வெளியேயும் எலி மருந்தின் நெடியை தங்களால் உணர முடிந்ததாகக் கூறுகின்றனர். இதன் பின்னர் தடயவியல் அதிகாரிகள் எலி மருந்தை எடுத்துச் சென்ற பின்னரும் அச்சத்தின் காரணமாக தங்கள் குழந்தைகளை வெளியே அனுமதிப்பதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான குன்றத்தூர் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வரும் கிரிதரன் (34), பவித்ரா (31) தம்பதி தங்கள் வீட்டில் தொடர்ச்சியான எலித் தொல்லையை சமாளிக்க, தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை நாடியுள்ளனர். தியாகராயநகரில் உள்ள அந்த நிறுவனம் 3 ஊழியர்களை கிரிதரன் வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
எலி மருந்து வைக்கும் பணியின் போது கிரிதரன், அவரது மனைவி பவித்ரா மற்றும் குழந்தைகள் வைஷ்ணவி, சாய் சுதர்சன் ஆகியோர் வெளியே சென்றுவிட, ஊழியர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே 4 பேரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
விஷமான மருந்து :எலி மருந்துகள் வைக்கப்பட்ட அன்றைய தினம் இரவு, கிரிதரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் படுக்கை அறையில் ஏசி போட்டு உறங்கி உள்ளார். அப்போது வீட்டில் வைத்த எலி மருந்து காற்றில் பரவியதால், உறங்கிக் கொண்டிருந்த நான்கு பேருக்கும் மூச்சுத்திணறல் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இரு குழந்தைகள் உயிரிழப்பு : எலி மருந்தின் நெடி தாங்க முடியாமல் விழித்துக் கொண்ட, கிரிதரன் உடனடியாக தனது நண்பரை அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த கிரிதரனின் நண்பர் நான்கு பேரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிதரன் மற்றும் அவரது மனைவி பவித்ராவை மேல் சிகிச்சைக்காக போரூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்குப்பதிவு : இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் உயிரிழந்த இரு குழந்தைகளின் உடலையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பெற்றோர் இருவரும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த நிலையில் அவர்களுக்கு குழந்தைகளின் மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என உறவினர்கள் கூறினர்.
இதையும் படிங்க :இரு பிஞ்சுகளின் உயிரைப் பறித்த எலி மருந்து.. தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது.. அபாய கட்டத்தை தாண்டிய பெற்றோர்!
போலீசாரின் விசாரணையின் அடிப்படையில், வீட்டில் எலி மருந்து வைத்த ஊழியர், நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தனியார் நிறுவன ஊழியர்களான தினகரன், சங்கர் தாஸ் ஆகிய இரண்டு பேரை குன்றத்தூர் போலீசார் கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் பிரேம்குமார் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
கைதானவர்கள் வாக்குமூலம் : இந்நிலையில், கைதான இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில், வீட்டின் அறையில் மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்றும், மருந்து வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் வரமாட்டோம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததன் பேரில், 12 இடங்களில் மருந்துகள் வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மருத்துவமனை அறிக்கை : உயிருக்கு போராடி வந்த கணவன், மனைவி இருவரும் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டி நலமுடன் இருப்பதாகவும், கூடுதலாக இரண்டு நாட்களுக்கு இருவரும் ஐசியு-வில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.