சென்னை:கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சராயத்தால், அந்தப் பகுதியே தொடர்ந்து சோகத்தில் இருந்து மீளாமல் உள்ளது. ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியது கள்ளச்சாராயம்.
கருணாபுரம் மட்டும் இல்லாமல் கோட்டைமேடு, சிறுவங்கூர், வன்னஞ்சூர், சேஷசமுத்திரம், இளந்தை, கள்ளக்குறிச்சி நகரம், மாதவச்சேரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மது அருந்தியவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (ஜூன் 24) மாலை 5 மணி நிலவரத்தின்படி கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 156 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 பேர் குணமடைந்து வீடு திரும்பு உள்ளதாகவும், 58 பேர் இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, ”சின்னம்மா என்கின்ற மூதாட்டி இளம் வயதிலிருந்து குடிப்பார். அவர் டாஸ்மாக் கடைக்குச் சென்று மதுபானம் வாங்கி குடிப்பார். சில நேரங்களில் கள்ளச் சாராயம் வாங்கியும் குடிப்பார். தற்போது கள்ளச்சாரயத்தை குடித்ததால் தான் அவருக்கு வாந்தி வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். பின்பு சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இனிமேல் சாராயம் இருக்கக்கூடாது. முதலில் அதை அழிக்க வேண்டும். எல்லா டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூட வேண்டும். ஆண்கள் சிலர் டாஸ்மாக் கடை தூரமாக இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் அருகிலேயே விற்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர்.