திருவாரூர்: திருவாரூர் நகரின் முக்கிய நுழைவு வாயில் பகுதியாக இருந்து வருவது, திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள விளமல் கல்பாலம் பகுதி. இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், விஜயபுரம் பகுதியில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்காக, திருவாரூர் பழைய பேருந்து நிலைய பாதையை, முழுவதுமாக நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடைத்துள்ளது.
திருவாரூர் நகராட்சியின் இத்தகைய நடவடிக்கையால், திருவாரூர் நகரின் மையப் பகுதிக்குள் நுழையும் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும், விளமல் கல்பாலம் அருகே உள்ள பாலம் வழியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், தை மாத இறுதி முகூர்த்த நாள் மற்றும் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு நாளான நேற்று (பிப்.13), திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலை விளமல் கல்பாலம் அருகில், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது தவிர, மன்னார்குடி சாலை மார்க்கமாக திருவாரூர் நகருக்கு வரும் வாகனங்கள் என திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.