தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 5 பேர்.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை!

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் புதைந்த வீட்டில் இருந்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

Thiruvannamalai Land slide
திருவண்ணாமலை மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடந்த மீட்புப்பணி (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

திருவண்ணாமலை: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை அச்சுறுத்திய ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னரும் உள்மாவட்டங்களில் பலத்த மழையைக் கொடுத்தது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வரலாறு காணாத கனமழையை எதிர்கொண்டன. உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கார்த்திகைத் திருநாளில் இந்த மலையில் தான் தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறமாக 11வது வ உ சி நகரில் மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் விழுந்ததில் ராஜ்குமார் என்பவர் வீடு மண்ணில் புதைந்தது. இதில் ராஜ்குமார் அவரது மனைவி மீனா, (26) மகன் கௌதம், (9) மகள் இனியா (7) மற்றும் அண்டை வீட்டை சேர்ந்த சிறுமிகள் மகா (12) , வினோதினி (14) , ரம்யா (12) என மொத்தம் 7 பேர் நேற்று (டிச.1) புதையுண்டனர்.

நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணிகள் (Credits - ETV Bharat Tamilnadu)

மழை குறுக்கிட்ட போதிலும் 18 மணி நேரத்தீற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று மாலை 7:30 மணி நிலவரப்படி, மண்ணில் புதையுண்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவரின் கால் மட்டும் தனியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் இருந்தனர்.

நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது?: ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று திருவண்ணாமலை நகர்ப்பகுதியில் 16 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கிரிவலப்பாதையின் பின்புறம் உள்ள வ.உ.சி. நகர்ப்பகுதிகளில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

உள்ளூர்வாசி ஒருவர் பேசும் போது, வழக்கமாக மழை பெய்தால் மலைகளிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வரும், அது போன்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் மாலையில், செம்மண்ணும் ,சேறுமாக கலந்த தண்ணீர் வரத்தொடங்கியது. சிறிது நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து இரண்டு பாறைகள் பலத்த சத்தத்துடன் உருண்டு வந்தன என்றார்.

மண்சரிவைப் பார்த்ததும் முடிந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் இரண்டு வீடுகள் முழுவதுமாக சேற்றுக்குள் சிக்கிக் கொண்டன. இந்த வீடுகளுக்கு செல்லும் பாதையும் முழுவதுமாக சேற்றினால் மூடப்பட்டிருந்தது. மிகவும் குறுகலான பாதை என்பதால் மீட்புக்குழுக்கள் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த மாட்ட நிர்வாகத்தினர் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். எனினும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் மீட்புக்குழுக்களால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் - 35 வீரர்களும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் - 50 வீரர்களும், மாநில மீட்பு படையினர் - 20 வீரர்களும், திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்கள் - 40 நபர்கள் மற்றும் காவல்துறை சார்பாக 60 நபர்களும் என மொத்தம் 170 பேர் மீட்டு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதனிடையே தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மீட்புப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் பெரிய மழையை எதிர் கொண்டிருப்பதாகக் கூறினார். மண் சரிவு காரணமாக பாறை உருண்டதில் ஒரு வீட்டில் இருந்தவர்கள் 4 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தை மற்றும் கணவன் ,மனைவி என 7 பேர் சிக்கியிருக்கின்றனர் எனவும் அமைச்சர் கூறினார்.

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி குறுகலான பாதை என்பதாலும் பெரிய கனரக வாகனங்கள் உள்ளே வர முடியாத காரணத்தினாலும் மீட்பு பணி மிகவும் மெதுவாகவே நடைபெற்றது. "ஜேசிபி போன்ற வாகனங்களோ பாறைகளை உடைக்கக்கூடிய பெரிய உபகரணங்களோ கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் கைகளாலேயே பாறைகளை உடைத்தும் அப்புறப்படுத்தியும் வருகின்றனர் இதன் காரணமாக மீட்பு பணி சவாலான ஒன்றாக உள்ளது" என அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் கூறினார்.

ஓரளவு பாதையை சீரமைத்த பின்னர் திங்கட்கிழமை மாலையில் ஜேசிபி எந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது ஜேசிபி எந்திரத்தில் சிக்கியவாறு ஒரு சிறுவனின் உடல் கிடைத்த வீடியோ காட்சியை அங்கிருந்த செய்தியாளர் பகிர்ந்துள்ளார். கோரமான அந்த காட்சிகளை பயன்படுத்த வேண்டாம் என ஈடிவி பாரத் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து அதே பகுதியில் கைகள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details