தஞ்சாவூர்: ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178 வது ஆராதனை விழாவையொட்டி, திருவையாற்றில் பந்தக்கால் நடும் விழா இன்று (டிசம்பர் 22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் சத்குரு ஸ்ரீ தியாகராஜர், தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சன வீதியில் வாழ்ந்து, காவிரி கரையில் முக்தி அடைந்துள்ளார். அவர் மறைந்த பகுள பஞ்சமி தினம் ஆராதனை விழாவாக ஆண்டுதோறும் இசை கலைஞர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 178ஆவது ஆராதனை விழா வரும் 2025 ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி 1 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா பந்தக்கால் நடும் நிகழ்வு (Credits - ETV Bharat Tamilnadu) பந்தகால் நடும் நிகழ்ச்சி :
இவ்விழாவினை முன்னிட்டு இன்று (டிசம்பர் 22) காலை 9 மணிக்கு, திருவையாறு காவிரி கரையில் தியாகராஜர் முக்தி அடைந்த அவரது இடத்தில், திருவுருவ சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார், கணேசன், பஞ்சநதம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ கோயில் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:"உண்டியலில் போட்ட அனைத்தும் முருகனுக்கே சொந்தம்" - மொபைலைப் பறிகொடுத்தவருக்கு ஷாக் கொடுத்த திருப்போரூர் கோயில்!
ஆராதனை விழாவின் நிறைவு நாளான, தியாகராஜர் சித்தியடைந்த பகுள பஞ்சமி தினமாகிய ஜனவரி 18 ஆம் தேதி, ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் தியாகராஜர் சன்னதி முன்பு அமர்ந்து புல்லாங்குழல் இசைத்தும், பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும் அவருக்கு இசையஞ்சலி செலுத்த உள்ளனர்.
மேலும், விழா நடைபெறும் ஐந்து நாட்களிலும் இந்தியா மற்றும் உலக புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வித்வான்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் வருகை புரிந்து தியாகராஜர் கிருதிகளைப் பாடி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.