தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பதி லட்டு விவகாரம்: அதிகாலை 2 மணிவரை சோதனை; பல ஆவணங்களை எடுத்துச் சென்ற ஆந்திர குழு?

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த குழுவினர் திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி, ஆய்வுக்கான மாதிரிகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஏ.ஆர் டைரி நிறுவனத்தில் சோதனை செய்த ஆந்திர அதிகாரிகள்
ஏ.ஆர் டைரி நிறுவனத்தில் சோதனை செய்த ஆந்திர அதிகாரிகள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 7:11 AM IST

திண்டுக்கல்: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திற்கு, நேற்று சனிக்கிழமை (நவம்பர் 23)உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த அலுவலர் உள்பட 14 பேர் கொண்ட ஆந்திர குழுவினர் சோதனை செய்ய வந்திருந்தனர். சோதனையின் முடிவில் பல ஆவணங்கள் மற்றும் உணவு மாதிரிகளை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் இறைச்சியின் கொழுப்பு உள்ளிட்ட கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இதனையடுத்து, திருப்பதி லட்டு குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, ஆய்வு முடிவில் நெய்யில் விலங்குகள் கொழுப்பு இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் (ETV Bharat)

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இச்சம்பசம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தொடர்ந்து, திருப்பதியில் லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனத்தின் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கும் விசாரணையில் உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநிலம் விசாரணை குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மத்திய அதிகாரிகள் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முறையாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி லட்டு (ETV Bharat)

திண்டுக்கல்லில் ஆந்திர அதிகாரிகள் சோதனை: இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என 3 அதிகாரிகள் தலைமையில், 14 பேர் கொண்ட குழுவினர் நான்கு கார்களில், நேற்று - சனிக்கிழமை (நவ.23) பிற்பகல் 12 மணியளவில், திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:திருப்பதி லட்டு விவகாரம்: "ஆதாரம் எங்கே? கடவுள் விஷயத்தில் அரசியல் வேண்டாம்" - ஆந்திர அரசை சாடிய உச்ச நீதிமன்றம்

14 மணி நேரம் சோதனை:பிற்பகல் 12 மணியளவில் தொடங்கிய சோதனையை, இன்று (நவ.24) அதிகாலை 1.30 மணி வரை ஏஆர் டெய்ரி நிறுவனத்தில், சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆய்வு முடிவடைந்துள்ள நிலையில், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஏஆர் டெய்ரி நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்கள், கணக்கு ஏடுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details