சென்னை:இலங்கையில் தமிழர்கள் மீது நடக்கும் சித்ரவதைகள் குறித்து ஐ.நா.வினால் நியமனம் செய்த நிபுணர் குழு ஆதாரங்களையும், ஆவணங்களையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மே 17, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை அரசினால் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இந்த நாள். மே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வை அடையாளப்படுத்துவதற்காகவே எங்களுடைய இயக்கத்திற்கு மே 17 இயக்கம் என்ற பெயர் வைக்கப்பட்டது.
15 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இலங்கையில் சித்ரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவதை ஐநாவின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. கடந்த 5 வருடங்களில் இலங்கை அரசினால், காவல் படையினரால், ராணுவத் துறையினரால் 123 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 51 பேர் இலங்கை காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாலிதீன் கவர்களைக் கொண்டு முகத்தை மூடியும், நீருக்குள் தலையை அழுத்தி ஆசன வாயில் கம்பிகளைச் செலுத்தி சித்திரவதைகளை செய்து வருவதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. தண்ணீர் குழாய் போடுவதற்காக தோண்டப்பட்ட போது மணலுக்கு அடியில் இரண்டு இடத்தில் மனித புதைக்குழிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை குழுவால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான உடல்கள் என்று தெரிந்தபின், இலங்கை அரசு இந்த விவகாரத்தை கைவிட்டது.