சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசி வருவதாக பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கூட செய்தியாளர்களை சந்தித்த சீமான், '' அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர். பெரியார் சிந்தித்து, பேசியது, எழுதியது எல்லாம் தமிழ் பேரினத்திற்கு எதிரானது. விடுதலை, பிறந்தநாள் செய்தியில் "இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எதிரிகள். இவர்கள் நமக்கு எதிரானவர்கள்" எனக் குறிப்பிட்டனர். நமக்கு என்று யாரைக் குறிக்கிறீர்கள்? சமதர்மம், சமத்துவம்தானே உங்கள் கோட்பாடு? நமக்குக் கீழானவர்கள் எதிரி என்றால் அவர்கள் எந்த இனம்? இதைவிடக் கொடிய தீண்டாமை சிந்தனை உண்டா?'' என சீமான் பரபரப்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், சீமானுக்கு எதிராக மதுரையில் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.