சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் மயக்கமுற்றனர் என்பதும், 5 பேர் உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையளிக்கிறது. இப்பெருந்துயரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிடவேண்டும் என்றும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
இந்திய விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் 'விமானப்படை நாள்'-ஐ கடைபிடித்து வருகிறது. இதுவரை தலைநகர் டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் நடைபெற்றது.
அந்த வகையில், இந்தாண்டு தமிழ்நாட்டில் - மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை இந்த சாகச நிகழ்வை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும், தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டன. இதுதொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொதுமக்களை வெகுவாக ஈர்த்ததால் லட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர்.