தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணிப்பெண் கொடுமை; தம்பதி மீது வழக்குப் பதிவு.. திருமாவளவன் கடும் கண்டனம் - பல்லாவரம் எம்எல்ஏ ரியாக்‌ஷன் என்ன? - பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன்

Pallavaram DMK MLA: பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் - மருமகள் ஆகிய இருவரும், தனது வீட்டில் பணிபுரிந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதற்கு திருமாவளவன் உள்பட பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதனிடையே, இதற்கான விளக்கத்தை திமுக எம்எல்ஏ அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 10:29 AM IST

Updated : Jan 20, 2024, 5:26 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், சென்னை திருவான்மியூர் சவுத் அவன்யூவில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மெர்லினா - ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியின் (பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் - மருமகள்) வீட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் வீட்டு வேலை செய்வதற்காக, மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல், மாதம் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு ஜீலையில், இளம்பெண் பணி செய்ய விருப்பம் இல்லை எனவும், சொந்த ஊருக்கேச் செல்வதாக மெர்லினா - ஆண்ட்ரோ மதிவாணன் ஆகியோரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தம்பதி, இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியும், அடித்து துன்புறுத்தி முகம், கை, கால் பகுதிகளில் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் தினமான ஜனவரி 15 அன்று மெர்லினா - ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதி, இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு, அவரின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

அப்போது, இளம்பெண்ணின் முகம், கை, கால்களில் காயம் இருப்பதைக் கண்ட அவரது தாய், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். பின்னர், மருத்துவமனை மூலம் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகிய இருவர் மீதும் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வன்கொடுமைச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், ஆபாசமாக பேசுவது, தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்த வகையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில், “மாணவிக்கு எதிரான வன்கொடுமை, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 12ஆம் வகுப்பை முடித்துள்ள மாணவி, நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார்.

அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். வீட்டு உரிமையாளர் ஆன்டோ மதிவாணன் என்பவர், பல்லாவரம் தொகுதியைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர்தான், மாணவியை குரூரமாக கொடுமைப்படுத்தியுள்ளார் எனத் தெரிய வருகிறது.

வீட்டு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே பல மாதங்களாக அவருக்கு சம்பளம் வழங்காமலும், அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமலும், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்கியதுடன், மனிதாபிமானமற்ற முறையில் அடித்து துன்புறுத்திக் கொடூரமாக வதைத்துள்ளாரென்று தெரிய வருகிறது. இது மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஈவிரக்கமற்ற இச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவி, கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்து மருத்துவராகும் கனவுடன் உழைத்திட, வீட்டுப் பணியில் சேர்ந்துள்ளார். உழைத்து சம்பாதித்துப் படிக்கத் துடிக்கும் ஒரு ஏழைச் சிறுமியை ஊக்கப்படுத்த வேண்டிய பக்குவம் இல்லாமல், நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் இவர்களின் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கணவன் தனது மனைவியை அடிக்கவோ, பெற்றோர் தமது பிள்ளைகளை அடிக்கவோ, ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ கூடாது என்கிற 'மனித உரிமை' குறித்த விழிப்புணர்வு, உலகெங்கும் வளர்ந்துள்ள இக்காலச் சூழலில், இவர்களால் எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. அவரை நள்ளிரவு வரை வேலை செய்யச் சொல்லி அடித்ததுடன், சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி அம்மாணவி கதறுவது நெஞ்சை உலுக்குகிறது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்படுள்ளவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். 18 வயதுக்கும் கீழாகவுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் குற்றச் செயல்களைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தழுவிய அளவில், இது குறித்து விரிவான புலனாய்வை மேற்கொள்ள, நீதிபதி ஒருவரின் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவருடைய மருத்துவக் கல்விக்கான கனவை நனவாக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார். மேலும், இப்பிரச்னை குறித்து குற்றம் சாட்டப்பட்ட நபரின் தந்தையான பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “எனது மகனுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகியது. இதனையடுத்து, எனது மகன் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். அதேநேரம், நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவர். அதேபோல், நானும் எப்போதாவது அங்கு செல்வேன்.

அங்கு நடந்தது குறித்த முழு விவரம் கூட எனக்குத் தெரியாது. எனவே, நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும், என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரதமர் மோடி‌ இன்று ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்!

Last Updated : Jan 20, 2024, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details