சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் விசிக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதில், சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் விசிக பானை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டைத் தவிர மேலும் 4 மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. தெலங்கானாவில் 17 தொகுதிகளில் 10 தொகுதிகள், கர்நாடகாவில் 6 தொகுதிகள், கேரளாவில் 5 தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு தொகுதி ஆகியவற்றில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், தெலங்கானா 10 தொகுதிகளில் 2 பெண்கள், 2 ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1 பழங்குடியின வேட்பாளருக்கு வாய்ப்பு” என இந்த 4 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
மேலும் பேசிய திருமாவளவன், “இதில் தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் கிஷான் ரெட்டி போட்டியிடும் செகந்திராபாத் தொகுதியில் பகிதிபல்லி சிம்சன் போட்டியிடுகிறார். ஆந்திராவில் மட்டும்தான் இந்தியா கூட்டணி காங்கிரஸ் உடன் இருக்கிறது. பிற மாநிலங்களில் அப்படி சூழ்நிலை காணவில்லை. அதனால், திட்டமிட்டவாறு அந்தந்த மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு விசிக முடிவு செய்துள்ளது.
இந்த தொகுதிகளில், விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம், காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஒய்.எஸ்.ஆர்.சர்மிளாவுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். ஆந்திர பிரதேசத்தில் மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் அந்தந்த மாநிலங்களுக்கு வெளியிடப்படும்.