சென்னை:சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், ஒவ்வொருவராக காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு முதலாவதாக 8 நபர்கள் செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர். அந்த 8 நபர்களில் ஒருவரான திருமலை என்பவரும் பூந்தமல்லி கிளை தனி சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று சிறையிலிருந்த திருமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து சிறைக் காவலர்கள் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.