தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்குறள், புறநானூறு இடம்பெறாத பட்ஜெட்; 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்கும் இடமில்லை! - budget 2024 - BUDGET 2024

திருக்குறள், புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் இருந்து பாடல்களை மேற்கோள்காட்டி தமது பட்ஜெட் உரையை தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட் தாக்கலின்போது தமிழ் இலக்கியங்கள் எதையும் மேற்கோள்காட்டாமல் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Credit - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 7:54 PM IST

Updated : Jul 23, 2024, 8:29 PM IST

ஹைதராபாத்:2024 -25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (ஜுலை 23) தாக்கல் செய்தார். தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அவர், இதற்கு முன் திருக்குறள், புறநானூறு, ஆத்திக்சூடி போன்ற தமிழின் தனிச்சிறப்புமிக்க சங்க இலக்கியங்களை மேற்கோள்காட்டியே தமது பட்ஜெட் உரையை தொடர்வதை பொதுவான வழக்கமாக கொண்டிருந்தார்.

குறிப்பாக, 2019 -20 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அவர், 2019 ஜூலை 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது தமது பட்ஜெட் உரையை தொடங்குவதற்கு முன், சங்ககாலப் புலவரான பிசிராந்தையாரின் பாடலை மேற்கோள்காட்டினார்.

"காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,யானை புக்க புலம் போல,தானும் உண்ணான், உலகமும் கெடுமே" என்ற அப்பாடலை நிர்மலா சீதாராமன் அவையில் வாசித்துடன், அதற்கான விளக்கத்தையும் அவர் சபையில் கூறினார்.

ஓர் அரசு மக்களிடம் வரியை எப்படி வசூலிக்க வேண்டும்? என்பதை எடுத்துரைக்கும் இந்த புறநானூறு பாடலை, பட்ஜெட் தாக்கலின்போது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் வாசித்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இதன் காரணமாக, அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கலின்போதும் அமைச்சர் இந்தமுறை தமிழ் இலக்கியங்களில் இருந்து எந்தப் பாடலை மேற்கோள்காட்ட போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுவதும் வழக்கமாக இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்புக்கேற்ப, 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, ஒரு சிறந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் "பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து" என்ற திருக்குறளை நாடாளுமன்றத்தில் மேற்கோள்காட்டி பேசினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அத்துடன் ஒளவையாரின் ஆத்திச்சூடியில் இடம்பெற்றுள்ள "பூமி திருத்தி உண்" என்ற வரிகளையும் அவர் மேற்கோள்காட்டி அசத்தினார்.

ஆனால், 2024 -25 ஆம் நிதியாண்டுக்கான இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது, திருக்குறள், புறநானூறு, ஆத்திச்சூடி என எந்தவொரு தமிழ் இலக்கியத்தின் பாடல்களையும் அமைச்சர் நி்ர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டி பேசவில்லை. அத்துடன், 'தமிழ்நாடு' என்ற வார்த்தைகூட அவரது உரையில் இடம்பெற்றதாக தெரியவில்லை. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மத்திய பட்ஜெட் எதிரொலியால் விலை குறைய, அதிகரிக்க உள்ள பொருட்கள்?

Last Updated : Jul 23, 2024, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details