தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 13 விமானச் சேவைகள் ரத்து!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 4 சிறிய ரக விமானங்களின் சேவைகளும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 9 விமானங்களின் சேவைகள் உட்பட 13 விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையம் கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 11:09 PM IST

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாகப்பட்டினத்தின் கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கு 300 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டு இருந்தது.

இது வடமேற்கு திசையில் தற்பொழுது நகர்ந்து வருகிறது. கடந்த 6 மணி நேரமாக, 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது தற்போது புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் 13 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையான வட தமிழகம் நோக்கி நகர்கிறது.

ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே நாளை கரையை கடக்கும் வகையில் நோக்கி நகர்கிறது. புயல் கரையை கடக்கும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.25 மணிக்கு மங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இரவு 8.50 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க :ஃபெங்கல் புயல் உருவானது! இப்போ 10 கிலோ மீட்டர் வேகம்; கரையை கடக்கும்போது?

அதேபோல் மங்களூரில் இருந்து இன்று இரவு 11.10 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இரவு 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த 4 விமானங்களும், ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் ஆகும். பலத்த காற்று வீசும் போது இதைப் போன்ற சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுவது பாதுகாப்பானது அல்ல. எனவே, வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக இந்த 4 விமானங்கள் இன்று இரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் தவிர்த்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வருகை, புறப்பாடு என 9 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த 9 விமானங்கள் ரத்துக்கு காரணம் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் காரணம் தான். அதற்கும் புயல் மழை, மோசமான வானிலைக்கும் சம்பந்தம் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details