தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவுடன் அதிமுக எப்போதும் கூட்டணி இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்! - அதிமுக பாஜக கூட்டணி

D Jayakumar: பாஜகவை பொறுத்தவரை அமித்ஷா, அவர்களது கருத்தை கூறலாம், எங்களின் நிலைப்பாடு அந்தக் கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதுதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
பிஜேபியுடன் அதிமுக எப்போதும் கூட்டணி இல்லை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 4:50 PM IST

பிஜேபியுடன் அதிமுக எப்போதும் கூட்டணி இல்லை

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் அதிமுக சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்பு கூட்டம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் இன்று (பிப்.07) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், செம்மலை, ஓஎஸ் மணியன், ஆர்பி உதயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவின் இமயம் போன்ற தலைவர்களை, குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா ஆகியோரை சிறுமைப்படுத்தும் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வகையில் தொண்டர்களின் மனநிலையைப் பொறுத்தவரை, எப்போதும் பிஜேபி கூட்டணி தேவையில்லை என்பதுதான்.

எனவே, தொண்டர்களின் மனநிலைதான் கட்சி தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரதிபலிக்கப்பட்டு, தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டு தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையில் இருந்து எப்போதும் எந்த மாற்றமும் இல்லை. பிஜேபியுடன் கூட்டணி இல்லை. பிஜேபியை பொறுத்தவரை அமித்ஷா, அவர்களது கருத்தை கூறலாம். எங்களின் நிலைப்பாடு அந்தக் கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதுதான்" என தெரிவித்தார்.

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஓபிஎஸ் விரக்தியின் உச்சக்கட்டத்தில் உள்ளார். அவர் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம். அதிமுக கட்சி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சியுடன் இருக்கும் நிலையில், அதை ஜீரணிக்க ஓபிஎஸ் ஆல் முடியவில்லை.

சின்னத்தை முடக்குவது என்பது எந்த கொம்பனாலும் முடியாத விஷயம். பிரளயம் ஏற்பட்டாலும் சரி இரட்டை இலையை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது. ஓபிஎஸ் பேச்சை கேட்க யாரும் இல்லை. கூலிக்கு ஆள் பிடித்து உட்கார வைத்தால் கூட இருக்க மாட்டார்கள், குழப்பத்தை ஏற்படுத்த ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார். தொண்டர்கள் அதனை நம்பத் தயாராக இல்லை.

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்பெயின் சென்று வந்துள்ளார். இவர் ஒப்பந்தம் போட்டாரா, இல்லை அவர்களுடன் இவர் ஒப்பந்தம் போட்டாரா, யார் ஒப்பந்தம் போட்டார்கள் என்பது தெரியவில்லை. அதை தெளிவுபடுத்த வேண்டியது, அரசாங்கத்தின் கடமை. திமுக, தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்துக் கொண்டு இருக்கிறது.

அதிமுக மகத்தான வெற்றி பெறும். ஆசிரியர் முதல் அரசு ஊழியர்கள் வரை தட்டு ஏந்தும் நிலை, மடிப்பிச்சை கேட்கும் நிலையை திமுக அரசு உருவாக்கி இருக்கிறது. யாருக்கும் விடியவில்லை, ஒரு குடும்பத்திற்கு மட்டும் விடிந்துள்ளது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம்” என்று திமுகவை குற்றம் சாட்டினார். மேலும், இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டச் செயலாளர் சேகர், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், அமைப்புச் செயலாளர் காந்தி, மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்; அதிமுக கூட்டணி குறித்து எப்போது அறிவிக்கும்? - ஜெயக்குமார் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details