மதுரை: மதுரையின் மாபெரும் அடையாளமாகவும், உலகப் புகழ் பெற்ற ஆன்மிகத் திருத்தலமாகவும், மதுரையின் நடுநாயகமாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளேயும் மற்றும் கோயிலைச் சுற்றியும் பல்வேறு சிறிய கோயில்கள் உள்ளன. இந்த சிறிய கோயில்கள் அனைத்தும் பல்வேறு சமூக மக்களுக்கு சொந்தமாகவும், பாரம்பரிய வழிபாட்டிடமாகவும் திகழ்கிறது.
கோயிலைச் சுற்றியுள்ள பல்வேறு வீதிகள் தமிழ் மாதங்களின் பெயர்களை சுமந்து, வியப்பான வரலாற்றைக் கொண்டு திகழ்கின்றன. நான்கு திசைகளைக் கொண்ட வெளி வீதிகள், அதற்கு சற்று உள்ளே மாசி வீதிகள், கோயிலின் வெளிப்புற சுற்றுப் பகுதியான சித்திரை வீதிகள் என இந்த வீதிகள் அனைத்தும் மீனாட்சி அம்மன் கோயிலின் பாரம்பரிய உற்சவங்களோடு தொடர்புடையவையாகும்.
அதிலும் குறிப்பாக நான்கு சித்திரை வீதிகளும், மீனாட்சி அம்மன் கோயிலின் அனைத்து திருவிழாக்களோடு தொடர்புடையவை. அதுமட்டும் இன்றி மதுரை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களின்போது வைகை ஆற்றில் கரகம் எடுத்து சித்திரை வீதிகளை வலம் வந்து, அவரவர் கோயிலுக்குச் செல்லும் நடைமுறை இன்றைக்கும்கூட வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், கிழக்குக் கோபுரம் அருகே அமைந்துள்ள மதுரை வீரன் கோயிலில் பறை இசைக்க அனுமதி மறுப்பதாகவும், சித்திரை வீதிகளில் பறை இசைக் கலைஞர்கள் பறை இசைத்துச் செல்ல கடந்த சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்படுவதாகவும் மதுரையிலுள்ள பட்டியல் சமூக மக்கள் மற்றும் பறை இசைக் கலைஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் ராஜசேகரன் கூறுகையில், "மதுரை மாநகர் மட்டுமன்றி மாவட்டம் முழுவதும் பரவி வாழ்கின்ற பட்டியல் சமூக மக்கள் தங்களது குல தெய்வமாக மதுரை வீரனை வழிபட்டு வருகின்றனர். கிழக்குக் கோபுரம் அருகேயுள்ள மதுரை வீரன் கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாயக்க மன்னர்கள் காலத்திலிருந்து இந்தக் கோயிலில் பட்டியல் சமூக மக்களால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அவரவர் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும்போது, வைகை ஆற்றின் தீர்த்தக்கிணற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து மதுரை வீரன் கோயிலின் முன்பாக பறையிசைத்து வழிபாடு செய்வது வழக்கமான நடைமுறையாகும்.
இந்த நடைமுறை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சித்திரை வீதிகளில் பறை இசைத்துச் செல்வதும் வழக்கமான நடைமுறைதான். அதனையும் தடை செய்துள்ளார்கள். பிற சமூகத்து மக்களின் கோயில் திருவிழாக்களின்போது சித்திரை வீதிகளில் அனுமதிக்கிறார்கள். ஆனால், மேலவாசல் பகுதி ஆதிகாளியம்மன், மகாகாளியம்மன், பொன் முனியாண்டி, சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறார்கள். மாற்றுப்பாதையில் மட்டுமே பறை இசைக்க அனுமதிக்கிறார்கள்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.