சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால், புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 7 செ.மீ மழையும், தேனி போடிநாயக்கனூர், நெல்லை மாஞ்சோலை, மதுரை சிட்டம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. தென் தமிழகத்தில் இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.0 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 39.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் 31 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை: தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, ஏப்.13 அன்று தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.14: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.15: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.