தேனி:தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதகுகளை இயக்கி, வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்திற்காக வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் மூலம் திறந்து வைத்தார்.
இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர். திறக்கப்பட்ட தண்ணீர் வைகை அணையின் பிரதான ஏழு மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறியது. தற்போது திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1,05,005 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.