தேனி:தமிழ்நாடு காவல்துறை பெண் உயர் அதிகாரிகள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி, சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், தேனியில் அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் அவரது காரை சோதனை செய்ததில் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம் மற்றும் கார் ஓட்டுநர் ராம் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இரண்டு நாட்கள் விசாரணை செய்ய போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் மதுரையில் இருந்து தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு பெண் போலீசார் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். சவுக்கு சங்கரிடம் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தேனிக்கு எதற்காக வந்தார்? தேனியில் உள்ள தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் வாங்கினாரா? தேனியில் சவுக்கு சங்கருக்கு தொடர்பு உள்ள நபர்கள் குறித்தும், சவுக்கு சங்கருக்கு கஞ்சா புதைக்கும் பழக்கம் உள்ளதா என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இக்கேள்விகளுக்கு சவுக்கு சங்கர், தனக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இல்லை என பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இரண்டு நாள் விசாரணையில் இது தவிர, போலீசார் பல்வேறு கேள்விகள் குறித்து விசாரித்ததாகவும், இதில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் அவரைப் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது.
தற்போது இரண்டு நாட்கள் விசாரணை இன்றுடன் முடிவடைந்து, மாலை 3 மணிக்கு அளவில் மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி கூறிய நிலையில், இன்று காலை தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
இதையம் படிங்க:ஒரு நாள் போலீஸ் கஸ்டடிக்கு பிறகு பெலிக்ஸ் ஜெரால்டு மீண்டும் சிறையில் அடைப்பு; நாளை ஜாமீன் மனுத்தாக்கல்! - FELIX GERALD CASE