தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தீயிட்டுக் கொளுத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

தேனியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தீயிட்டு கொளுத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 8:44 AM IST

தேனி: கடந்த 2022ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தின் எதிரே காலி இடத்தில் விளையாடிய 7 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர், அந்த சிறுமி நடந்ததை அவரின் பெற்றோரிடம் தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளார்.

அப்போது, சிறுமியின் ஆடையில் தீ வைத்து அந்த இளைஞர் கொளுத்தியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது, சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. பின்னர், தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் சிறுமி, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையானது, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்கள் மற்றும் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், அந்த இளைஞர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... 25 வயதான இளைஞருக்கு ஐந்து ஆண்டு சிறை..! தஞ்சை கோர்ட் அதிரடி!

இதன்படி, 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, அந்த இளைஞருக்கு 2012 குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு சட்டப் பிரிவு 9(M) மற்றும் 10-ன் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்தனர்.

மேலும், சிறுமியை தீ வைத்து எரித்த குற்றத்திற்காக, இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் இரண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை என இரு தீர்ப்புகளை நீதிபதி கணேசன் வழங்கினார்.

அதேநேரம், சிறுமியை இழந்து பாதிப்புக்கு உள்ளான குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details