தேனி:தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டிட தொழிலாளிகளாக பணிபுரியும் முனியாண்டி - மாலதி தம்பதி. இவர்களது ஏழு வயது மகன் தீபக். தீபக்கிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரு கைகள் மற்றும் கால்கள் செயல் இழந்த நிலையில் தீபக்கின் தந்தை முனியாண்டி தீபக்கை தேனி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் சேர்த்தார்.
அங்கு தீபக்கை பரிசோதித்த மருத்துவர்கள் தீபக்கிற்கு குழந்தைகளை தாக்கும் அரிய வகை நோய்யான 'குல்லியன் பாரி சின்ரோம்’ என்ற தசைகளை பலமிழக்க செய்யும் நோய் தாக்கியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்து சித்ராவின் வழிகாட்டல்படி குழந்தைகள் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் செல்வகுமார் தலைமையில், மருத்துவர்கள் ரகுபதி, இளங்கோவன், கிருத்திகா மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலகிருஷ்ணன், வேல்மணி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினர் தீபக்கை உள் நோயாளியாக அனுமதித்து 111 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து, பேசிய மருத்துவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் முத்துசித்ரா , “தீபக் கைகள் மற்றும் கால்கள் செயல் இழந்த நிலையில் மூச்சு விடவே சிரமப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் முதற்கட்டமாக 45 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சைக்கு சேர்ந்த முதல் நாளே நரம்புகளை தாக்கும் விளைவை குறைக்க விலை உயர்ந்த இன்ட்ரவனஸ் இம்யூனோக்ளோபுலின் மருந்தை அளித்து சிகிச்சை அளித்தனர்.
மருத்துவர்கள் மற்றும் சிறுவன் தாய் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) மேலும், சுவாசத் தொற்று ஏற்படாமல் தவிர்க்கவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர குழந்தைக்கு தேவையான உணவை மூக்கு வழியாக வயிற்றுக்கு குழாய் மூலம் அளிக்கப்பட்டதோடு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க:இலக்கியம் பாதி கணக்கு மீதி.. கலாம் உலக சாதனையில் இடம்பெற்ற சென்னை சிறுமி..!
இது குறித்து, பேசிய குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் செல்வகுமார், “ சிறுவன் தீபக் 'குல்லியன் பாரி சின்ரோம்’ என்னும் அரிய வகை நோய்யால் பாதிக்கப்பட்டார். 111 நாட்கள் 24 மணி நேரம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதால் தீபக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது தீபக் இயல்பாக மூச்சுவிட ஆரம்பித்து, தானாக நடக்கவும், பேசவும், உணவு உட்க்கொள்ளும் அளவுக்கு முழுமையாக குணம் அடைந்துள்ளார்” என்றார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர்.26) சிறுவனின் தாய் மாலதி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அறைக்கு வந்து, சிகிச்சை அளித்த முதல்வர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இது குறித்து, பேசிய பாதிக்கபட்ட சிறுவனின் தாய் மாலதி, “தசைகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் கை மற்றும் கால்கள் செயலிழந்த நிலையில் என் மகனை இங்கு சேர்த்தேன். மூன்று மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அளவிற்கு எங்களிடம் பணமில்லை. ஆனால் எப்படியாவது எனது மகனை காப்பாற்ற வேண்டும் என உறுதியுடன் இருந்தேன். கடவுள் காட்டிய வழி இந்த அரசு மருத்துவமனை. மருத்துவர்கள் செய்துள்ள இந்த உதவியை நான் எப்போது மறக்க மாட்டேன். எனது மகனை மீட்டு கொடுத்த அனைவருக்கும் மிக நன்றி” என்றார்.
தனியார் மருத்துவமனையில் இந்த குழந்தைகளை தாக்கும் அரியவகை நோய் சிகிச்சைக்கு 35 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம் என கூறப்படும் நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 111 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிறுவனின் சிகிச்சைகாக 24 மணி நேரமும் போராடி தற்போது, காப்பாற்றிய மருத்துவர்கள் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்