தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடற்கூறியலில் நவீன எம்பார்மிங் முறை... தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை! - Embalming system

Fiber Glass Embalming: உடற்கூறியல் துறையில் பைபர் கிளாஸ் மூலம் எம்பார்மிங் முறையை கண்டுபிடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி சாதனை படைத்துள்ளதாக இக்கல்லூரி முதல்வர் பாலசங்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் முதல்வர் பாலசங்கர்
தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் முதல்வர் பாலசங்கர் (Credits: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 10:51 PM IST

Updated : May 30, 2024, 6:49 PM IST

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக 1,600 பேரும், வெளிநோயாளிகளாக தினந்தோறும் 3,000க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தேனி மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உடற்கூறியலில் நவீன எம்பார்மிங் முறை தொடர்பான வீடியோ (Credits: ETV Bharat Tamilnadu)

இந்த நிலையில், உடற்கூறியல் துறையில் உடல் உறுப்புகள் மற்றும் அதன் முழு உடலை பாதுகாப்பாக வைக்க பைபர் கிளாஸ் எம்பார்மிங் என்ற புதிய முறை, முதன்முதலில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இதனை உடற்கூறியல் துறை தலைவர் மருத்துவர் எழிலரசன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் அறிமுகப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார்கள். இதற்கான காப்பு உரிமையும் வேண்டி விண்ணப்பித்துள்ளார்கள்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலசங்கர் தலைமையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கப்பட்டது. அப்போது, "உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் மனித உடல் மற்றும் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் முறைகளில், இழைக் கண்ணாடியில் (பைபர் கிளாஸ்) பாதுகாக்கப்படுவது என்பது புதிய முயற்சியாகும். பிளாஸ்டினேசன் என்னும் முறை முதன்முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த கந்தர் என்பவரால் 1977-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒரு சில மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே இம்முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில், தேனி மருத்துவக் கல்லூரியில்தான் முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இம்முறை உடற்கூறியல் துறை தலைவரான மருத்துவர் எழிலரசன் என்பவரால் 2012ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது இந்த பிளாஸ்டினேசன் செய்த உடல் உறுப்புகள் மற்றும் முழு உடலை பாதுகாப்பாக வைக்க ஃபைபர் கிளாஸ் எம்பெட்டிங் என்ற புதிய முறையை உலகிலேயே முதன்முதலில் அரசு தேனி மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். இதற்கு காப்புரிமை வேண்டியும் விண்ணப்பித்துள்ளோம்.

இம்முறையில் சந்தையில் கிடைக்கும் பிசின் என்ற ரசாயன பொருளை, உயர் வெப்பத்தில் 100 டிகிரி பிளாஸ்டினேசன் செய்யப்பட்ட உடல் மற்றும் உடல் உறுப்புகள் மீது ஊற்றப்பட்டு, மிகவும் குறைவான வெப்பம் (20 டிகிரி சென்டிகிரேட்) உள்ள அறையில் 24 மணி நேரம் வைத்து, பின் அவைகள் உலர வைக்கப்படுகிறது.

இந்த பைபர் கிளாஸ் எம்பெட்டிங் முறையில் தயாரிக்கப்படும் உறுப்புகள் மற்றும் மனித உடல்களை எளிதில் அழிக்க முடியாது. வருடக்கணக்கில் பாதுகாப்பாக வைக்கலாம். மேலும் இம்முறை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.

உடற்கூறியல் துறையில் மாணவர்களின் கல்விக்கு உபயோகப்படுத்தலாம். நோய்க்குறியியல் துறைக்கான மாதிரிகளையும் இம்முறையில் பயன்படுத்தலாம். குறைபாடு உள்ள சிசுக்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வேண்டாத மனித உறுப்புகள், குறுக்கு வெட்டு மாதிரிகள் போன்றவற்றையும் சம்பந்தப்பட்ட துறைகளில் வைத்து மாணவர்களின் கல்விக்கு உபயோகப்படுத்தலாம்" என்று பாலசங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர், ஆர்.எம்.ஓ, துணை கண்காணிப்பாளர், துறை தலைவர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் எப்போது? - வெளியான முக்கிய அப்டேட்! - 12th Answer Sheet Copies Download

Last Updated : May 30, 2024, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details