வேட்புமனுவை மறந்த திமுக வேட்பாளர் தேனி:நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 -ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு, மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த வாரம் தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று (புதன்கிழமை) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்காக, திறந்த வேனில் நின்றபடியே தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தார்.
அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் வந்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் முன்பாக பேரணியாக வந்த திமுகவினர் நிறுத்தப்பட்டு, திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அமைச்சர்கள் வந்த 2 வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது.
வேட்புமனுவை மறந்த வேட்பாளர்?இதனையடுத்து, தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம், வேட்பு மனுவுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என செய்தியாளர்கள் கேட்கவே, தனது வேட்பு மனு மறந்துவிட்டது குறித்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு நினைவுக்கு வந்துள்ளது.
தன்னுடைய காரில் வேட்பு மனுத் தாக்கல் வைத்திருந்த நிலையில், அவர் மாற்று காரில் ஏறி வந்ததால், அவர் வந்த வாகனம் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. இரண்டு கார்களை மட்டும் போலீசார் அனுமதித்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வனின் காரை அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து, உடனடியாக தனது உதவியாளரை அழைத்து, தனது காரில் உள்ள வேட்பு மனுவை எடுத்து வரக் கூறினார். இதனால் அப்செட் ஆன அமைச்சர்கள், தங்க தமிழ்ச்செல்வனுடன் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
இதன் பின்னர், இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற அவரது உதவியாளர் வேட்பு மனுவை எடுத்து வந்தார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் தங்க தமிழ்ச்செல்வன். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:வாக்காளர் அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம்.. அது எப்படி? முழு விபரம்! - How To Vote Without Voter ID Card