தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலைக்குச் செல்வதில் தகராறு.. மனைவி மீது கொடூர தாக்குதல் நடத்திய குடும்பத்திற்கு ஆயுள் தண்டனை! - Theni Mahila Court - THENI MAHILA COURT

Theni Court: தேனி பெரியகுளம் அருகே, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் கணவர், கணவரின் தந்தை மற்றும் தாய் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 3:35 PM IST

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் மலைச்சாமி (44) மற்றும் சங்கீதா (29) தம்பதி. இவர்கள் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சங்கீதா குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டதால், தான் கூலி வேலைக்குச் செல்லப் போவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு கணவர் மறுத்துள்ளார்.

இதனால் தொடர்ந்து கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, மலைச்சாமி, சங்கீதாவை சந்தேகப்பட்டு தொடர்ந்து மது போதையில் சண்டையிட்டு வந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று மது போதையில் வந்த மலைச்சாமி, சங்கீதாவை சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி, மலைச்சாமியின் தந்தை வீட்டிற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

பின்னர், மலைச்சாமி, அவரது தந்தை ராமன் (63), தாய் செல்வம் (55) ஆகிய மூவரும் சேர்ந்து சங்கீதாவைத் தாக்கி உள்ளனர். மேலும், வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து சங்கீதா மீது மலைச்சாமி ஊற்றி தீ வைத்ததாகவும், இதற்கு மாமனார் மற்றும் மாமியார் உடந்தையாக இருந்ததாகவும், தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருந்த சங்கீதா மரண வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில், கணவர் மற்றும் கணவரின் தாய், தந்தை ஆகிய மூவர் மீதும் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், உயிரிழந்த சங்கீதாவின் மரண வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், மூவரும் கொலை குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, மலைச்சாமிக்கும், அவரது தந்தை ராமன் மற்றும் தாய் செல்வம் ஆகிய மூவருக்கும் தனித்தனியே ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், மேலும் அதைக் கட்டத் தவறினால், மேலும் 3 மாத மெய் காவல் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மூவரையும் சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details