திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஜூலை 10) பலத்த மழை பரவலாக பெய்தது. இதில் நத்தம் அய்யாபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான காமராஜ் என்பவருக்கு அப்பகுதியில், சொந்தமான வீடு ஒன்று உள்ளது.
இந்த வீட்டின் ஒரு பகுதியில் காமராஜும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். மற்றொரு பகுதியில் அவரது மகன் அருண் பாண்டி, மருமகள் கிரிஜா மற்றும் பேத்திகள் நிஷா ஶ்ரீ, உமா ஶ்ரீ ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.
சுவர் இடிந்து சேதமான வீடு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், இன்று (ஜூலை 11) காலை வழக்கம் போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக தயார்ப்படுத்திக் கொண்டிருந்தபோது, திடீரென பலத்த சத்தம் வீட்டின் உள் பகுதியில் இருந்து கேட்டுள்ளது. இதனால், வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, வீட்டின் ஒரு பகுதியில் இருந்த சுவர், நேற்று (10.07.2024) பெய்த மழையில் முற்றிலும் சேதமடைந்து சரிந்து வீட்டின் வெளிப்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுமட்டும் அல்லாது காமராஜ் வீட்டின் இடிந்த சுவர், அருகில் உள்ள வீட்டுச் சுவரின் மீது விழுந்ததில் அந்த வீட்டின் ஜன்னல் மற்றும் சிமெண்ட் காரைகளும் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
இந்த சூழலில், இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிராம நிர்வாக அலுவலர் சித்ரா, வீட்டின் சுவர் இடிந்துவிழுந்த பகுதி மற்றும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அருகில் இருந்த வீடு ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வீட்டின் சுவர் இடிந்துவிழுந்தது குறித்து அறிக்கையை தயாரித்து மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசுக்கு தெரியப்படுத்தி, உறியா நிவாரணம் பெற்று தரப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இடிந்த சுவர் வீட்டின் உள்பகுதியில் விழாமல் வெளிப்பகுதியில் யாரும் பயன்படுத்தாத இடத்தில் விழுந்ததால், நல் வாய்ப்பாக பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னை மெட்ரோ ரயிலில் தீப்பொறி? அலறி ஓட்டம்பிடித்த பயணிகள்..சிஎம்ஆர்எல் அளித்த விளக்கம்!