சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி பேரவையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது; கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள 1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி, விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது ஆகிய குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா:தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம். கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது.
இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சிறைத் தண்டனையின் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையினுடைய அளவையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதியை மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்க கொண்டு செல்வற்கும், வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.