சென்னை: இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம் வருகின்ற 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வருகின்ற 26 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.
ஒத்திகை நிகழ்ச்சி
குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெறும். அந்த வகையில் 76 ஆவது குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்பிற்கான முதல் ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல் இன்று 2ம் ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதையடுத்து வருகிற 24 ஆம் தேதி கடைசி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மெரினா கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
அணிவகுப்பு ஒத்திகை (credit - ETV Bharat Tamil Nadu) குடியரசு தினம் அன்றும் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்றயை இரண்டாம் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வருவது போல் ஒத்திகைகள் மற்றும் முப்படை வீரர்கள், காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையும் நடைபெற்றது.
குடியரசு தினத்தன்று முதலமைச்சர் வழங்க உள்ள விருதுகளான அண்ணா பதக்கம், வேளாண்மை விருது, காந்தியடிகள் காவலர்கள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான விருதுகள் வழங்குவது போன்ற ஒத்திகைகள் நடைபெற்றன.
அரசு பள்ளி மாணவிகள் ஒத்திகை (credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியை பார்க்க வருபவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!
இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்கள் மற்றும் குடியரசு தினம் அன்று காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறும். ஆனால், அந்த பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று இடமாக உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
அணிவகுப்பு ஒத்திகை (credit - ETV Bharat Tamil Nadu) அலங்கார அணிவகுப்பு ஊர்திகள்:
செய்தித்துறை சார்பாக மங்கள இசை அணிவகுப்பு, காவல்துறையின் அணிவகுப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அணிவகுப்பு, கூட்டுறவுத் துறை அணிவகுப்பு, ஊரக வளர்ச்சித் துறை அணிவகுப்பு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அணிவகுப்பு, பள்ளிக்கல்வித் துறை அணிவகுப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அணிவகுப்பு, கைத்தறி அணிவகுப்பு, சுற்றுலாத் துறை அணிவகுப்பு, சமூக நலத்துறை அணிவகுப்பு, கால்நடை பராமரிப்புத் துறை அணிவகுப்பு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அணிவகுப்பு, வீட்டு வசதித்துறை அணிவகுப்பு, வனத்துறை அணிவகுப்பு, இந்து சமய அறநிலையத் துறை அணிவகுப்பு, மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அணிவகுப்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் குடியரசு தினத்தன்று பங்கேற்க உள்ளது. அதற்கான ஒத்திகைகள் நிகழ்ச்சிகளும் இன்று நடைபெற்றது.