சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடற்கரைக்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான பொதுமக்கள் இளைப்பாறுவதற்காக வருவது வழக்கம். அதேபோல், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வதற்கும் மக்கள் அதிகமாக கடற்கரை நோக்கி வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்: மேலும், வார இறுதி நாட்களில் மீன்கள் வாங்கவும் இப்பகுதியில் பொதுமக்கள் குவிகின்றனர். இந்த நிலையில், பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ள மணல் பரப்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திடீரென கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. இதன் காரணமாக மணல் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கருப்பாக காணப்படுகிறது.
இதனால் அப்பகுதிகளுக்கு பொழுதுபோக்கிற்கும், நடைபயிற்சி செய்வதற்கு வரும் பொதுமக்களும், கடற்கரையில் விளையாடுவதற்கு வரும் நபர்களும் கடலிலிருந்து ஏதோ கழிவுப் பொருட்கள் கரை ஒதுங்கி இருப்பதால் மணல் பரப்பு கருப்பாக மாறி உள்ளதாக எண்ணி, அதில் கால் வைக்க அச்சப்படுகின்றனர். அத்துடன், நோய்த்தொற்று ஏதாவது ஏற்படும் என பயந்து, அந்த பகுதிகளுக்குச் செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர்.
மீனவர் விளக்கம்: இதுகுறித்து பனையூர் கடற்கரையை ஒட்டி உள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களிடம் கேட்டபோது, ''கடற்கரை மணற்பரப்பு பொதுவாக பழுப்பு, வெள்ளை, கருப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் அடுக்குகளாக இருக்கும். கடல் சீற்றம் அதிகம் காணப்படும்போது, கடற்கரையில் உள்ள மணற்பரப்பின் மேல் அடுக்கில் உள்ள வெள்ளை நிற மணல், அரிப்பு ஏற்பட்டு, அடியில் உள்ள கருப்பு மண் வெளிப்படும்.
ஆண்டுதோறும் ஆடிமாதம் முடிந்ததும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டு, அடுத்த ஓரிரு மாதத்தில் கடல் அலையின் சீற்றம் குறைந்த பிறகு, மீண்டும் கருப்பு நிறமாக உள்ள மணல் மீது வெள்ளை நிற மணல் பரப்பிக் கொண்டு இயல்பு நிலைக்கு மாறிவிடும் என்றும், இதனைக் கண்டு அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
நோய்த்தொற்று அபாயம்:மேலும், இது போன்ற நிகழ்வு டிசம்பர் மாதம் வரை மாறி மாறி ஏற்படும். கடற்கரையில் மணல்கள் கருப்பு நிறமாக மாறி உள்ளதால் ஆமைகளுக்கும், மீன்களுக்கும் மற்றும் சில உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், இதனால் எந்த ஒரு நோய்த்தொற்றும் ஏற்படாது'' எனவும் தெரிவித்தனர்.