சென்னை: தனையார் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை உள்ளிட்ட 16 காவல் நிலையங்களிலும், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஒவ்வொரு வழக்கின் விசாரணைக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் தன்னை அழைத்துச் செல்வதால் 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில், சில வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், சில வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுவரை 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் அடுத்த வழக்குகளில் கைது செய்கின்றனர். அதனால், கைது செய்யப்படாத வழக்குகளில் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.