கைவயலில் தேர்தலைப் புறக்கணித்த மக்கள் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீழ முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக, ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று, அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும், இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த மாதிரி பரிசோதனைகள் ஒருவருக்கு கூட ஒத்துப் போகாததால் சிபிசிஐடி விசாரணை பின்னடைவைச் சந்தித்துள்ளது. மனிதக்கழிவுகளின் மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, குற்றவாளிகளை இன்று வரை காவல்துறையினர் கண்டுபிடிக்காததால், தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அறிவித்திருந்தனர். இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராமத்தில் 561 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், வேங்கைவயலில் மட்டும் 59 வாக்குகள் உள்ளன. இதில் மூன்று பிரிவினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற வாக்குப்பதிவிற்கு இவர்கள் வாக்களிப்பதற்காக இறையூரில் தனியே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இன்று காலை முதல் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிக்குச் செல்லவில்லை. இது குறித்து, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், "எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஆகவே, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரையில், எதிர்வரும் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் போன்ற அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம்" என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக பேசிய வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த லதா என்பவர் கூறுகையில், "எங்களைக் குற்றவாளிகளாக பார்க்கிறார்கள். ஆனால், எங்களைப் பாதிக்கப்பட்டவர்களாகப் பார்த்திருந்தால் எங்களுக்கான நீதி கிடைத்திருக்கும். ஆகவே, எங்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் வாக்களிக்க மாட்டோம்" என்று கூறினார்.
மேலும், இந்த வழக்கிற்குத் தீர்வு கண்டு, குற்றவாளிகள் கண்டுபிடிக்காத வரை எதிர்வரும் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்து, கருப்புக்கொடி கட்டியும், வாயில் கருப்புத் துணி கட்டியும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களிடம் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத கிராம மக்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தையானது நடத்தப்பட்டது.
அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் இறுதியில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், வேங்கை வயல் கிராம மக்கள் வசிப்பதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும், வேங்கைவயல் கிராம மக்கள் தொழில் வளர்ச்சியில் மேம்பட புதிய தொழில்கள் தொடங்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த கிராம மக்கள் முன் வைத்தனர்.
அதனை ஏற்ற திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் வேங்கைவயல் கிராம மக்கள் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தனர். மொத்தம் அந்த கிராமத்தில் 59 வாக்குகள் உள்ள நிலையில் 53 பேர் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தனர். அப்போது மாலை 6 மணியை கடந்து விட்டதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இறுதியாக 6.45 மணியளவில் வேங்கைவயல் கிராமத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வேங்கைவயல் வாக்குச்சாவடியில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 59 வாக்காளர்கள் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 502 வாக்காளர்கள் என மொத்தம் 561 வாக்காளர்கள் உள்ள நிலையில் இன்று 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
இதில் வேங்கைவயல் கிராமத்தில் 53 பேர், இறையூர் கிராமத்தில் 8 பேர், காவேரி நகரைச் சேர்ந்த 1 நபர் அடங்குவார். இறையூர் கிராம மக்களிடம் தனியாக பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தக்க தொட்டியில் மனித கழிவு கலந்த குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே வாக்களிக்க வருவோம் என்பதால் பேச்சுவார்த்தை தோல்வி முடிந்தது. இதனால், இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 499 பேர் வாக்களிக்காதது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலிருந்து வாக்களித்த முதல் பெண்!