தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் இடஒதுக்கீட்டு முறை; அமைச்சர் சொன்ன தகவல்!

முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகை ஆணை பெறும் மாணவர்கள்
ஊக்கத்தொகை ஆணை பெறும் மாணவர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 10 hours ago

சென்னை: முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம் மற்றும் பாரதி இளங்கவிஞர் விருது வழங்கும் திட்டங்களின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத் தொகைக்கான ஆணைகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை சைதாப்பேட்டை கல்லூரிக் கல்வி இயக்கக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பேசும்போது, ''மாணவர்கள் படிப்பதற்கு, சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதே இந்த ஆட்சிக் கொள்கையாகும். கல்வியும், சுகாதாரமும் தனது இரண்டு கண்களாக பாவித்து முதலமைச்சர் செயலாற்றி வருகிறார். கல்வி ஒன்றே யாராலும் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத பெரும் சொத்து. எனவே, மாணவர்கள் அனைவருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கண்டுப்பிடிப்புகளை ஊக்கப்படுத்துவது நோக்கம்

அதனடிப்படையில், முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் (Chief Minister Research Fellowship) 30.8.2022 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் தமிழ்நாடு முதலைமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டு மாணவர்களின் ஆராய்ச்சித் திறமையை மேம்படுத்துவதும், புதிய கண்டுப்பிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்த ஊக்கத்தொகை பெற மாநில அளவில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு மூலம் 120 மாணவர்களை தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டு மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 120 என்ற எண்ணிக்கை தற்போது 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.25,000

அரசு கல்லூரிகளில் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் மற்றும் மாநிலப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.25,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

கலைப்புலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.10,000 வீதமும், அறிவியல் பாடப்பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.12,000 வீதமும், கூடுதலாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.2,000 இதரச் செலவினத் தொகையாக வழங்கப்படுகின்றது.

தமிழ்நாடு இடஒதுக்கீட்டு முறை

இத்திட்டத்தில் பயன் பெற தேர்வு பெறும் மாணவர்கள், தமிழ்நாடு இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முதலமைச்சர் ஆலோசனைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டதுபோல், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ள ஏதுவாக, போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்'' என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details