சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையல் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று புயலாக மாறுமா என்பது குறித்தும், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்தும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அடுத்த 4 நாட்களுக்கு
அப்போது பேசிய அவர், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து, இலங்கை தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள் கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.