சென்னை: பிரபல ரவுடி நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தனது கணவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை காவல் துறையினர் போலி என்கவுண்டர் செய்ததாகவும் அதே போல தனது கணவரையும் போலீசார் என்கவுண்டர் செய்யக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோரிடம் மனு அளித்ததாகவும் ஆனால் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.