தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரவாயல் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து.. செட்டில் நிறுத்தப்பட்டிருந்த 15 கார்கள் என்னவானது? - maduravoyal fire accident - MADURAVOYAL FIRE ACCIDENT

maduravoyal fire accident: மதுரவாயலில் பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ அடுத்தடுத்து நான்கு கடைகளுக்கு பரவியது. நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

தீ விபத்து நடைபெற்ற பிளாஸ்டிக் குடோன்
தீ விபத்து நடைபெற்ற பிளாஸ்டிக் குடோன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 5:48 PM IST

சென்னை:சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி மின்வாரிய அலுவலகம் அருகே பிளாஸ்டிக் பை குடோன் ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை குடோன் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதிக அளவில் புகை வந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்தது மதுரவாயல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் தீயானது அருகில் உள்ள ஹோட்டல், டயர் கடை மற்றும் கார் செட் ஆகிய பகுதிகளுக்கும் பரவியது.

இதையடுத்து கூடுதலாக பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக கார் செட்டில் இருந்த 15 கார்களை தீயணைப்பு துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் அவை தப்பித்தன. இருப்பினும் அருகேயுள்ள ஹோட்டல், டயர் கடை உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு கடைகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதையடுத்து அப்பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயை அணைக்க போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. மேலும் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாலையில் திடீரென பற்றி எரிந்த அரசு ஏசி பஸ்; தமிழக அரசு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details