மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள புத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது இந்த கல்லூரியில் கடந்த 10 நாட்களாக இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்பிடிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிபிஏ., பிஏ., தமிழ் மற்றும் ஆங்கில இளங்கலை பட்டப்படிப்புக்கான தேர்வு நேற்று (மே 13) மதியம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்லூரி முதல்வர் அறைக்குள் வந்த நபர் ஒருவர், தன்னை பறக்கும் படை அதிகாரி எனவும் மாணவர்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து என்னுடன் வாருங்கள் என்று பேராசிரியர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று தேர்வு எழுதும் மாணவர்களை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதன் தொடர்ச்சியாக, அலுவலர்கள் அறைக்கு வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்த அந்த நபரை அங்குள்ள பேராசிரியர்கள் வரவேற்று காபி மற்றும் இனிப்பு வழங்கியதாகவும், அதன் பிறகு அவரிடம் கல்லூரி பொறுப்பு முதல்வர் முரளி மற்றும் ஆசிரியர்கள் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.