விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவை தொடர்ந்து இத் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை 10) 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதற்கிடையே, இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 24) விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மொத்தமாக 64 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 56 பேருடைய வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 29 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவற்றில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 16 வேட்பாளர்களும், 40 சுயேச்சைகளும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்புமனுக்கள் இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.