கோயம்புத்தூர்: தமிழகத்தில் நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
மேலும், ராமகிருஷ்ணனை எதிர்த்து திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் மேயர் வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மேயர் தேர்தலில், திமுக வேட்பாளர் கிட்டுவை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜை திமுக கவுன்சிலர் ஒருவர் முன்மொழிந்ததும், திமுக கவுன்சிலர் பலர் பவுல்ராஜுக்கு வாக்கு செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், மொத்தம் 23 வாக்குகள் பவுல்ராஜ் பெற்றிருந்தார். இருப்பினும், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனாலும், தாம் அறிவித்த வேட்பாளருக்கு எதிராக வாக்குகள் பதிவானது திமுக தலைமைக்கு அதிருப்தி அளித்ததாகக் கூறப்படுகிறது.